சிலர் கருதுவது போன்று இஸ்லாம் சுமார் 14 நூற்றாண்டுகளுக்கு முன் முஹம்மத் என்பவரால் தோற்றுவிக்கப் பட்ட மதம் அன்று. மாற்றமாக மனித குலத்தைப் படைத்த கடவுளினால் அவர்களின் வாழ்வு சீர்பெற அவர்கள் படைக்கப் பட்ட நாள் முதல் கொடுக்கப் பட்ட வாழ்வு நெறியே இஸ்லாம். இஸ்லாம் என்ற அரபு வார்த்தை, பணிவு, கட்டுப்படல், வழிப்படல் என்ற அர்த்தத்தோடு, சாந்தி சமாதானம் என்ற கருத்தையும் பொதிந்துள்ளது. எனவே எவர் இறைவனின் கட்டளைகளுக்கு முழுமையாக கட்டுப் பட்டு நடக்கின்றாரோ, அவர் ஈருலகிலும் நிம்மதியையும், சாந்தத்தையும் அடைவார். ஒருவன் முஸ்லிமாக கருதப் படுவதற்கு, முஸ்லிமான அம்மா, அப்பாவுக்கு பிறந்து இருக்க வேண்டும் அல்லது முஸ்லிம் மத்தியில் அறிமுகமான பெயர் வைத்திருக்க வேண்டும் என்ற எந்தவிதமான நிபந்தனைகளும் இல்லை. முஸ்லிம் என்றால் தன்னைப் படைத்த கடவுளுக்கு வழிப்படுபவன் என்பதே அர்த்தம். எனவே ஒருவன் தன்னைப் படைத்த இறைவனுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு, அவன் தனது செய்தியை கூறுவதற்காக அனுப்பிய தூதர்களையும், அவர்களில் இறுதியாக அனுப்பப்பட்ட முஹம்மத் (அவர்கள் அனைவரின் மீதும் அல்லாஹ்வின் சாந்தி உண்டாகட்டும்) அவர்களையும் ஏற்றுக் கொண்டால் போதும் அவன் முஸ்லிமாக மாறிவிடுவான்.
இஸ்லாத்தின் அடிப்படைக் கடமைகள், மற்றும் நம்பிக்கைக் கொள்ள வேண்டிய அம்சங்களின் சுருக்கம் பின்வருமாறு அமைந்துள்ளது:
- நம்பிக்கைப் பிரகடனம் (இஸ்லாத்தின் முதல் தூண்:
"அஷ்ஹது அல்லா இலாஹ இல்லல்லாஹ், வ அஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு"
மொழி பெயர்ப்பு:
"வணங்கத்தக்க நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று நான் சாட்சி கூறுவதோடு, முஹம்மத் (ஸல்லல்லாஹு அளைஹிவஸல்லம்) அவர்கள் அவனின் அடிமையும், தூதருமாவார் என்றும் நான் சாட்சி கூறுகிறேன்"
ஒருவன் மேற்கூறப்பட்ட வசனங்களை உள்ளத்தினால் ஏற்றுக்கொண்டு நாவினால் மொழிந்தால் முஸ்லிமாக மாறிவிடுவான்.
- அதனைத் தொடர்ந்துள்ள இஸ்லாத்தின் அடிப்படை செயற்பாட்டுத் தூண்கள்: அவை தொழுகை (சலாஹ்), நோன்பு (சவ்ம்), ஏழைவரி (சகாத்), புனித மக்கா யாத்திரை (ஹஜ்)
- நம்பிக்கைக்கான தூண்கள்: அல்லாஹ், மலக்குகள், வேதங்கள், தூதர்கள், மறுமை நாள், விதி என்பனவற்றை நம்புவதாகும்
No comments:
Post a Comment