Quran MP3 online listen Koran audio Download - tvQuran English Version

Quran MP3 online listen Koran audio Download - tvQuran English Version

Quran MP3 online listen Koran audio Download - tvQuran English Version

Quran MP3 online listen Koran audio Download - tvQuran English Version

விபச்சாரம்.


8. 'அல்லாஹ்விற்கு இணையாக எதனையும் கருதுவதில்லை; திருடுவதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; உங்கள் குழந்தைகளைக் கொல்வதில்லை; நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் (யார் மீதும்) அவதூறு கூறுவதில்லை; எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்வதில்லை என்று என்னிடம் ஒப்பந்தம் செய்யுங்கள். உங்களில், (அவற்றை) நிறைவேற்றுகிறவரின் நற்கூலி அல்லாஹ்விடம் உள்ளது. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையாவது ஒருவர் செய்து, (அதற்காக) இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால் அது அவருக்குப் பரிகாரமாம் விடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையாவது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றித் தோழர்களில் ஒரு குழு அமர்ந்திருக்கும்போது கூறினார்கள்.
Volume :1 Book :2
81. 'எனக்குப் பின்னர் வேறு எவரும் உங்களுக்கு அறிவிக்க முடியாத நபிமொழி ஒன்றை (இப்போது) நான் உங்களுக்கு அறிவிக்கப் போகிறேன். 'கல்வி குறைந்து போய் விடுவதும் அறியாமை வெளிப்படுவதும் வெளிப்படையாய் விபச்சாரம்நடப்பதும் ஐம்பது பெண்களுக்கு அவர்களை நிர்வம்க்கும் ஒரே ஆண் என்ற நிலமை வரும் அளவுக்குப் பெண்கள் மிகுதியாவதும் ஆண்கள் குறைந்து விடுவதும் மறுமை நாளின் சில அடையாளங்களாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) கூறக் கேட்டிருக்கிறேன்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :3
1044. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் சூரிய கிரகணம் ஏற்பட்டது. மக்களுக்கு நபி(ஸல்) அவர்கள் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) நீண்ட நேரம் நின்றார்கள். (ருவிலிருந்து) எழுந்து நீண்ட நேரம் நின்றார்கள். இது முதல் நிலையை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் மற்றொரு ருகூவுச் செய்தார்கள். இது முதல் ருகூவை விடக் குறைந்ததாக இருந்தது. பின்னர் நீண்ட நேரம் ஸஜ்தாச் செய்தார்கள். பின்னர் முதல் ரக்அத்தில் செய்தது போன்றே இரண்டாம் ரக்அத்திலும் செய்தார்கள். கிரகணம் விலகியதும் தொழுகையை முடித்தார்கள். மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, 'சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளவையாகும். எவருடைய மரணத்திற்கோ எவருடைய வாழ்வுக்கோ அவற்றுக்குக் கிரகணம் பிடிப்பதில்லை. கிரகணத்தை நீங்கள் கானும்போது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள். அவனைப் பெருமைப் படுத்துங்கள்; தொழுங்கள்; தர்மம் செய்யுங்கள்" என்று குறிப்பிட்டார்கள். மேலும் தொடர்ந்து 'முஹம்மதின் சமூதாயமே! ஓர் ஆணோ, பெண்ணோவிபச்சாரம் செய்யும்போது அல்லாஹ் கடுமையாக ரோசம் கொள்கிறான். முஹம்மதின் சமுதாயமே! நான் அறிவதை நீங்கள் அறிந்தால் குறைவாகச் சிரித்து அதிகமாக அழுவீர்கள்' என்றும் குறிப்பிட்டார்கள்.
Volume :1 Book :16
1329. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
தம் சமூகத்தில் விபச்சாரம் செய்த ஆண் பெண் இருவரை யூதர்கள் நபி(ஸல்) அவர்களிடம் அழைத்து வந்தார்கள். நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டபடி அவ்விருவரும் பள்ளிவாசலில் ஜனாசாத் தொழுகை தொழுமிடத்திற்கருகில் கொண்டு செல்லப்பட்டுக் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள்.
Volume :2 Book :23
2053. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"ஸம்ஆ" என்பவரின் அடிமைப் பெண்ணுடைய மகன் எனக்குப் பிறந்தவன். எனவே, அவனை நீ கைப்பற்றிக் கொள்!" என்று உத்பா இப்னு அபீ வக்காஸ்(ரலி) (தம் மரண வேளையில்) தம் சகோதரர் ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அவர்களிடம் உறுதிமொழி வாங்கினார். மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டு ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) அந்தச் சிறுவனைப் பிடித்துக் கொண்டு, 'இவன் என் சகோதரரின் மகன்! என்னிடம் அவர் உறுதிமொழி வாங்கியிருக்கிறார்!' எனக் கூறினார். அப்போது ஸம்ஆவின் மகன் அப்து(ரலி), 'இவன் என் சகோதரன்; என் தந்தையின் அடிமைக்குப்பிறந்தவன்; என் தந்தையின் ஆதிக்கத்தில் இவனுடைய தாயார் இருக்கும்போது பிறந்தவன்!' எனக் கூறினார். இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது ஸஅத்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! இவன் என் சகோதரரின் மகன். இவனைப் பற்றி என் சகோதரர் உறுதிமொழி வாங்கியிருக்கிறார்' எனக் கூறினார். அதற்கு ஸம்ஆவின் மகன் அப்து(ரலி) 'இவன் என் சகோதரன்! என் தந்தையின் ஆதிக்கத்தில் இவனுடைய தாய் இருக்கும்போது என் தந்தைக்குப் பிறந்தவன்! எனக் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள்,"ஸம்ஆவின் மகன் அப்தே! இவன் உமக்குரியவனே! எனக் கூறினார்கள். பின்னர் '(தாய்) யாருடைய ஆதிக்கத்தில் இருக்கும்போது குழந்தை பிறக்கிறதோ அவருக்கே அக்குழந்தை உரியது! விபச்சாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது! எனக் கூறினார்கள். பின்னர், தம் மனைவியும் ஸம்ஆவின் கிகளுமான ஸவ்தா(ரலி) அவர்களிடம் 'ஸவ்தாவே! நீ இவரிடம் ஹிஜாபைப் பேணிக் கொள்!" என்றார்கள். ('அவர் ஸம்ஆவின் மகன்தான்! என்று நபி(ஸல்) அவர்கள் தீர்ப்பளித்தாலும்) உத்பாவின் தோற்றத்தில் அவர் இருந்ததால்தான் இவ்வாறு நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அதன் பிறகு அவர் அன்னை ஸவ்தா(ரலி) அவர்களை மரணிக்கும்வரை சந்திக்கவில்லை.
Volume :2 Book :34
2152. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஓர் அடிமைப் பெண் விபச்சாரம் செய்து, அது நிரூபணமானால் அவளுக்கு. எஜமானன் கசையடி கொடுக்கட்டும்! (அவளை தண்டித்துவிட்டதால்) குற்றம் சொல்ல வேண்டாம்! பிறகு மறுபடியும் அவள் விபச்சாரம் செய்தால் அவளுக்குக் கசையடி கொடுக்கட்டும்! குற்றம் சொல்ல வேண்டாம்! மூன்றாம் முறையும் விபச்சாரம் செய்தால் அவளை (அவளுடைய எஜமானன்) முடியாலான ஒரு கயிற்றுக்காகவாவாது விற்று விடட்டும்!"
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :34
2153. & 2154. அபூ ஹுரைரா(ரலி) ஸைத்பின் காலித்(ரலி) ஆகியோர் அறிவித்தார்கள்:
"ஓர் அடிமைப் பெண் கற்புடனிருக்காமல் விபச்சாரம் செய்தால்... (என்ன செய்ய வேண்டும்?)" என்று நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், 'அவள் விபச்சாரம் செய்தால் கசையடி கொடுங்கள்; (அதற்குப்) பிறகும்விபச்சாரம் செய்தால் கசையடி கொடுங்கள்; மீண்டும் விபச்சாரம் செய்தால் அவளை ஒரு முடிக் கற்றைக்காவது விற்றுவிடுங்கள்!" என்றார்கள்.
"மூன்றாவது நான்காவது முறைக்கு மேல் என்னவென்று நான் அறிய மாட்டேன்!" என்று இப்னு ஷிஹாப்(ரஹ்) கூறினார்.
Volume :2 Book :34
2218. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி), அப்து இப்னு ஸம்ஆ(ரலி) ஆகிய இருவரும் ஓர் இளைஞன் விஷயத்தில் வழக்கு கொண்டு வந்தனர். 'இறைத்தூதர் அவர்களே! இந்த இளைஞன் என் சகோதரர் உத்பா இப்னு அபீ வக்காஸின் மகனாவார். என் சகோதரர் (அவரின் மரணத்தின் போது) என்னிடம் இதை வலியுறுத்திக் கூறினார். இந்த இளைஞன் அவரைப் போன்றே இருப்பதை நீங்கள் கவனியுங்கள்' என்று ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) கூறினார். அவ்விளைஞனிடம் தெளிவாக உத்பாவின் சாயலைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் அப்துபின் ஸம்ஆ(ரலி) அவர்களிடம், 'அப்தே! ஒரு பெண் யாருடைய அதிகாரத்தின் கீழ் இருக்கிறாளோ அவருக்கே அவள் பெற்றெடுத்த குழந்தை உரியது!விபச்சாரம் செய்தவருக்கு இழப்புதான் உரியது!' எனக் கூறினார்கள். பிறகு தம் மனைவி ஸவ்தா(ரலி) அவர்களிடம், 'ஸவ்தாவே! இந்த இளைஞனிடத்தில் நீ ஹிஜாபைப் பேணிக்கொள்!" என்று கூறினார்கள். அதற்குப் பிறகு ஸவ்தா(ரலி) ஒருபோதும் அந்த இளைஞரைக் கண்டதில்லை.
Volume :2 Book :34
2232. & 2233. ஸைத் இப்னு காலித்(ரலி), அபூ ஹுரைரா(ரலி) ஆகிய இருவரும் கூறினார்கள்:
நபி(ஸல்) அவர்களிடம், விபச்சாரம் செய்கின்ற, திருமணமாகாத அடிமைப் பெண்ணைப் பற்றிக் கேட்கப்பட்டது. நபி(ஸல்) அவர்கள் 'அவளுக்குக் கசையடி கொடுங்கள்! மீண்டும் அவள் விபச்சாரம் செய்தால் மீண்டும் அவளுக்குக் கசையடி கொடுங்கள்! மூன்றாவது முறை அல்லது நான்காவது முறை விபச்சாரம் செய்தால் அதன் பிறகு அவளை விற்று விடுங்கள்!" என்று பதிலளித்தார்கள்.
Volume :2 Book :34
2234. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"உங்களில் ஒருவரின் அடிமைப் பெண் விபச்சாரம் செய்து, அது நிரூபணமானால் தண்டனையாக அவளுக்குக் கசையடி கொடுங்கள்! அவளைக் குறை கூற வேண்டாம்! மீண்டும் விபச்சாரம் செய்தால் தண்டனையாகக் கசையடி கொடுங்கள்! அவளைக் குறை சொல்ல வேண்டாம்! பிறகு மூன்றாம் முறை விபச்சாரம் செய்து, அது நிரூபணமானால் முடியாலான ஒரு கயிற்றுக்காவது அவளை விற்று விடுங்கள்!"
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

தொழுகையில் ஏற்படும் மறதி


1224. அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார்.
அவர்கள் எங்களுக்கு ஏதோ ஒரு தொழுகையைத் தொழுகை நடத்தினார்கள். (அத்தொழுகையில்) இரண்டு ரக்அத்தை முடித்தபோது அமராமல் (மூன்றாவது ரக்அத்துக்காக) எழுந்துவிட்டார்கள். எனவே, மக்களும் நபி(ஸல்) அவர்களோடு எழுந்துவிட்டார்கள். தொழுகை முடியும் தருவாயில் நாங்கள் நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுப்பதை எதிர்பார்த்திருந்தபோது, அந்த இருப்பிலேயே ஸலாத்திற்கு முன் தக்பீர் கூறி, இரண்டு ஸஜ்தாக்கள் செய்துவிட்டு ஸலாம் கொடுத்தார்கள்.
Volume :2 Book :22
1225. அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார்.
தொழுகை நடத்திய நபி(ஸல்) அவர்கள் இரண்டாம் ரக்அத்தில் அமராமல் எழுந்துவிட்டார்கள். தொழுகையை முடிக்கும்போது இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள். அதன்பின்னர் ஸலாம் கொடுத்தார்கள்.
Volume :2 Book :22
1226. அப்துல்லாஹ்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் லுஹரில் ஐந்து ரக்அத்கள் தொழுதார்கள். உடனே அவர்களிடம் தொழுகை அதிகமாக்கப்பட்டுவிட்டதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி(ஸல்) அவர்கள் 'என்ன விஷயம்?' எனக் கேட்டார்கள். 'நீங்கள் ஐந்து ரக்அத்கள் தொழுகை நடத்தினீர்கள்' என ஒருவர் கூறினார். நபி(ஸல்) அவர்கள் ஸலாம் கொடுத்ததற்குப் பின்னர் இரண்டு ஸஜ்தாச் செய்தார்கள்.
Volume :2 Book :22
1227. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
அவர்கள் எங்களுக்கு லுஹரையோ அஸரையோ தொழுதுவிட்டு ஸலாம் கொடுத்தார்கள். அப்போது துல்யதைன்(ரலி) 'இறைத்தூதர் அவர்களே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா?' எனக் கேட்டார். நபி(ஸல்) அவர்கள் தங்களின் தோழர்களிடம், 'இவர் கூறுவது உண்மைதானா?' எனக் கேட்டபோது அவர்களும் 'ஆம்" என்றார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் பிந்திய இரண்டு ரக்அத்களைத் தொழுகை நடத்திவிட்டு இரண்டு ஸஜ்தாக்களும் செய்தார்கள்.
இப்னு ஸுபைர் மக்ரிப் தொழுகை நடத்தியபோது இரண்டு ரக்அத்திலேயே ஸலாம் கொடுத்துவிட்டுப் பேசியும்விட்டார். பின்பு (நினைவு வந்ததும்) மீதம் உள்ளதைத் தொழுதார். பின்னர் இரண்டு ஸஜ்தாச் செய்துவிட்டு இவ்வாறே நபி(ஸல்) அவர்கள் செய்தார்கள் எனக் கூறினார்" என ஸஅத் அறிவித்தார்.
Volume :2 Book :22
1228. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துடன் தொழுகையை முடித்தபோது துல்யதைன்(ரலி), 'இறைத்தூதர் அவர்களே! தொழுகை சுருக்கப்பட்டுவிட்டதா? அல்லது நீங்கள் மறந்து விட்டீர்களா?' எனக் கேட்டார். 'துல்யதைன் கூறுவது உண்மைதானா?' என்று நபி(ஸல்) அவர்கள் கேட்க, மக்களும் 'ஆம்' என்றார்கள். உடனே, நபி(ஸல்) அவர்கள் பிந்தைய இண்டு ரக்அத்களைத் தொழுதுவிட்டு ஸலாம் கொடுத்தார்கள். பின்பு தக்பீர் கூறித் தம் வழக்கமான ஸஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட சற்று நீண்டதாகவோ ஸஜ்தாச் செய்து, பின் (அதிலிருந்து) எழுந்தார்கள். (தஷஹ்ஹுத் ஓதவில்லை.)
இப்னு அல்கமா கூறுகிறார்: நான் முஹம்மத் இப்னு ஸிரீனிடம் ஸஜ்தா ஸஹ்வில் தஷஹ்ஹுத் உண்டா? எனக் கேட்டேன். அதற்கவர், அபூ ஹுரைரா(ரலி) உடைய அறிவிப்பில் தஷஹ்ஹுத் இல்லைதான் என்றார்'.
Volume :2 Book :22
1229. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
தொழுகைகளில் ஒரு தொழுகையை நடத்திய நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்திலேயே ஸலாம் கொடுத்துவிட்டார்கள். (அநேகமாக அது அஸர்த் தொழுகை என்றே நினைக்கிறேன் என முஹம்மது இப்னு ஸிரீன் கூறுகிறார்.) பின்பு எழுந்து பள்ளிவாசலின் முற்பகுதியிலிருக்கும் மரக்கட்டையின் பக்கம் சென்று அதன்மேல் தம் கையை ஊன்றி நின்றார்கள். அங்கே இருந்தவர்களில் அபூ பக்ர்(ரலி) உமர்(ரலி) இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் அது பற்றிப் பேசப் பயந்து கொண்டிருந்தபோது பள்ளியிலிருந்து வேகமாக வெளியேறி மக்கள், 'தொழுகை சுருக்கப்பட்டுவிட்டதோ' எனப் பேசினார்கள். அப்போது நபி(ஸல்) அவர்களால் துல்யதைன் என அழைக்கப்படும் ஒருவர் 'நீங்கள் மறந்து விட்டீர்களா அல்லது தொழுகை சுருக்கப்பட்டுவிட்டதா?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'நான் மறக்கவும் இல்லை. (தொழுகை) சுருக்கப்படவும் இல்லை" என்றவுடன் 'இல்லை நிச்சயமாக நீங்கள் மறந்து விட்டீர்கள்' என அவர் கூறினார். நபி(ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்கள் தொழுகை நடத்திவிட்டு ஸலாம் கொடுத்தார்கள். பின்பு தக்பீர் கூறித் தம் வழக்கமான ஸஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட நீண்டதாகவோ ஸஜ்தாச் செய்தார்கள். பிறகு தலையை உயர்த்தித் தக்பீர் கூறினார்கள். மீண்டும் தலையை (பூமியில்) வைத்துத் தக்பீர் கூறினார்கள். தம் வழக்கமான ஸஜ்தாவைப் போன்றோ அல்லது அதைவிட நீண்டதாகவோ ஸஜ்தாச் செய்து, பின்பு தம் தலையை உயர்த்தியாவாறே தக்பீர் கூறினார்கள்.
Volume :2 Book :22
1230. அப்துல்லாஹ் இப்னு புஹைனா(ரலி) அறிவித்தார்.
அவர்கள் லுஹர் தொழுகையில் முதல் இருப்பில் அமராமல் எழுந்துவிட்டார்கள். தொழுகையை நிறைவு செய்தபோது ஸலாம் கொடுப்பதற்கு முன்னால் முதல் இருப்பில் அமர மறந்ததற்குப் பரிகாரமாக ஒவ்வொரு ஸஜ்தாவிலும் தக்பீர் கூறி இரண்டு ஸஜ்தாக்கள் செய்தார்கள். உடனே மக்களும் நபி(ஸல்) அவர்களுடன் சேர்ந்து அந்த இரண்டு ஸஜ்தாக்களையும் செய்தனர்.
Volume :2 Book :22
1231. 'தொழுகைக்காக பாங்கு சொல்லப்பட்டால் பாங்கு சப்தம் தனக்குக் கேட்காமலிருப்பதற்காக ஷைத்தான் பின் துவாரத்தின் வழியாகக் காற்றுவிட்டவனாக ஓடி விடுகிறான். பாங்கு முடிந்ததும் திரும்பி வந்து இகாமத் கூறப்பட்டதும் மீண்டும் ஓடுகிறான். இகாமத் முடிந்ததும் மீண்டும் வந்து தொழுபவரின் உள்ளத்தில் ஊடுருவி 'இதை இதையெல்லாம் நினைத்துப்பார்' எனக் கூறி, அவர் இதுவரை நினைத்துப் பார்த்திராதவற்றையெல்லாம் நினைவூட்டி அவர் எத்தனை ரக்அத்கள் தொழுதார் என்பதை மறக்கடிக்கிறான். உங்களில் ஒருவருக்குத் தாம் தொழுத ரக்அத்களில் மூன்றா அல்லது நான்கா என்று தெரியவிட்டால் (கடைசி) இருப்பில் இரண்டு ஸஜ்தாச் செய்து கொள்ளட்டும்' இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :22
1232. 'உங்களில் ஒருவர் தொழத் தயாரானால் அவரிடம் ஷைத்தான் ஊடுருவி, அவர் எத்தனை ரக்அத் தொழுதார் என்பதையே அறியாத அளவுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி விடுகிறான். எனவே, உங்களில் ஒருவருக்கு இவ்வாறான நிலைமை ஏற்பட்டால் (கடைசி) இருப்பில் இருந்தவாறே இரண்டு ஸஜ்தாச் செய்யட்டும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :22
1233. குரைபு அறிவித்தார்.
அப்பாஸ்(ரலி), மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), அப்துர்ரஹ்மான் இப்னு அஸ்ஹர்(ரலி) ஆகியோர் என்னிடம் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று எங்கள் அனைவரின் ஸலாமையும் அவருக்குக் கூறும்! அஸருக்குப் பின் இரண்டு ரக்அத் தொழுவது பற்றி அவரிடம் கேட்பீராக! நபி(ஸல்) அவர்கள் அதை தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க அத் தொழுகையை (ஆயிஷாவே!) நீங்கள் தொழுவதாகக் கேள்விப்படுகிறோம் என்று கேட்பீராக!" என்று கூறினார்கள். (மேலும்) இப்னு அப்பாஸ்(ரலி), தாமும் உமரும், இவ்வாறு (அஸருக்குப் பின்) தொழுபவர்களை அடிப்பவர்களாக இருந்ததையும் தெரிவிக்கச் சொன்னார்.
ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்று, நான் அனுப்பப்பட்ட விஷயத்தைக் கூறினேன். அதற்கு ஆயிஷா(ரலி) 'நீர் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் கேளும்' எனக் கூறினார். நானும் இம்மூவரிடம் திரும்பி வந்து ஆயிஷா(ரலி) கூறியதைச் சொன்னேன். உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் சென்று ஆயிஷா(ரலி) அவர்களிடம் கேட்ட கேள்வியைக் கேட்குமாறு மீண்டும் அனுப்பினார்கள். (உடனே நான் உம்மு ஸலமா(ரலி) அவர்களிடம் நான் உம்மு ஸலமா(ரலி) விடம் வந்து விஷயத்தைக் கூறியபோது) நபி(ஸல்) அவர்கள் இவ்விரு ரக்அத்களைத் தடை செய்ததை கேட்டுள்ளேன். பிறகு அவர்கள் அஸர் தொழுதுவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுததை பார்த்தேன். தொழுதுவிட்டு என்னுடைய வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என்னுடன் அன்ஸாரிகளில் பனூ ஹராம் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர். அவர்களில் ஒரு பெண்ணை, தொழுது கொண்டிருக்கும் நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பி, 'நீ அவர்களுக்கு அருகில் சென்று இறைத்தூதர் அவர்களே! நீங்கள் இந்த இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடுத்ததை கேட்டிருக்கிறேன். ஆனால், இப்போது தாங்களே அதைத் தொழுவதை நான் பார்க்கிறேனே? என நான் கேட்டதாக அவர்களிடம் நீ கூறு. அவர்கள் தம் கைகளினால் சைகை செய்தால் நீ பின்வாங்கிவிடு எனக் கூறி அனுப்பினேன். அப்பெண்ணும் கூறப்பட்டது போன்றே செய்தார். நபி(ஸல்) அவர்கள் தம் கைகளால் சைகை செய்தபோது அப்பெண்மணி திரும்பி வந்துவிட்டார். தொழுகையை முடித்த நபி(ஸல்) அவர்கள், 'அபூ உமய்யாவின் மகளே! அஸருக்குப் பின்னால் (தொழுத) இரண்டு ரக்அத்தைப் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கிளையைச் சேர்ந்தவர்கள் வந்ததால் லுஹருக்குப் பின்னாலுள்ள இரண்டு ரக்அத்கள் தொழ முடியவில்லை; அத்தொழுகையை இந்த இரண்டு ரக்அத்களாகும்" என்றார்கள் என உம்மு ஸலாமா(ரலி) விடையளித்தார்கள்.
Volume :2 Book :22
1234. ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார்.
இப்னு அவ்ஃப் கோத்திரத்தார்களிடைய ஏதோ பிரச்சினை ஏற்பட்டு இருப்பதாக நபி(ஸல்) அவர்களுக்குச் செய்தி கிடைத்தது. எனவே, நபி(ஸல்) அவர்கள் தம் தோழர் சிலருடன் அங்கு சென்று அக்கோத்திரத்தார்களிடையே சமாதானம் செய்வதில் ஈடுபட்டிருந்தபோது தொழுகையின் நேரம் நெருங்கிவிட்டது. அப்போது பிலால்(ரலி), அபூ பக்ர்(ரலி) அவர்களிடம் வந்து 'அபூ பக்ரே! நபி(ஸல்) அவர்கள் (தங்கள் பணியின் நிமித்தமாக நேரத்தோடு வந்து சேர்வதிலிருந்து) தடுக்கப்பட்டிருக்கிறார்கள். தொழுகையின் நேரமும் நெருங்கிவிட்டது. எனவே, தாங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துகிறீர்களா?' எனக் கேட்டதற்கு அபூ பக்ர்(ரலி) 'நீர் விரும்பினால் செய்கிறேன்" என்றவுடன் பிலால்(ரலி) இகாமத் கூற அபூ பக்ர்(ரலி) முன்னின்று மக்களுக்குத் தொழுகை நடத்துவதற்காகத் தக்பீர் கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்கள் வரிசைகளினூடே வந்து (முதல்) வரிசையில் நின்றார்கள். (இதைக் கண்ட) மக்கள் கைதட்டலானார்கள். தொழுகையில் திரும்பும் வழக்கமில்லாத அபூ பக்ர்(ரலி) மக்கள் கைதட்டலை அதிகரித்தபோது திரும்பி (முதல் வரிசையில்) நபி(ஸல்) அவர்கள் நிற்பதைக் கண்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் அபூ பக்ரைப் பார்த்துத் தொழுகையைத் தொடரும்படி சைகை செய்தார்கள். எனினும், அபூ பக்ர்(ரலி) தம் கைகளை உயர்த்தி இறைவனைப் புகழ்ந்து திரும்பாமல் பின் நோக்கி வந்து (முதல்) வரிசையில் நின்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள் முன் சென்று மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். தொழுகையை முடித்ததும் மக்களை முன்னோக்கி 'மக்களே! தொழுகையில் (இதே போன்று) ஏதாவது நிகழ்ந்துவிட்டால் நீங்கள் ஏன் கை தட்டுகிறீர்கள்? கை தட்டுதல் பெண்களுக்குரிய செயலாகும். எனவே, யாருக்கேனும் தம் தொழுகையில் ஏதேனும் நிகழ்ந்துவிட்டால் 'ஸுப்ஹானல்லாஹ்' எனக் கூறட்டும். ஏனெனில், ஸுப்ஹானல்லாஹ்வைக் கேட்கிறவர் இந்தப் பக்கம் தம் கவனத்தைச் செலுத்துவார்' எனக் கூறினார்கள். பிறகு (அபூ பக்ர்(ரலி) அவர்களிடம்) 'அபூ பக்ரே! நான் உம்மை நோக்கிச் சைகை செய்தபோது மக்களுக்குத் தொடர்ந்து தொழுகை நடத்துவதிலிருந்து உம்மைத் தடுத்தது எது?' எனக் கேட்டார்கள். அதற்கு அபூ பக்ர்(ரலி) 'இறைத்தூதர் முன்னிலையில் தொழுகை நடத்து அபூ குஹாஃபாவின் மகனுக்குத் தகுதியற்ற செயலாகும்" எனக் கூறினார். 

(குடும்பச்) செலவுகள்


5351. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
இறைவனின் திருப்பொருத்தத்தை நாடி ஒரு முஸ்லிம் தம் குடும்பத்தாருக்குச் செலவிட்டால் அதுவும் அவருக்கு தர்மமாக மாறும்.
என அபூ மஸ்வூத் உக்பா இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
அறிவிப்பாளர்களில் ஒருவர் (அப்துல்லாஹ் இப்னு யஸீத், அல்லது ஷுஅபா இப்னு ஹஜ்ஜாஜ்(ரஹ்)) கூறுகிறார்:
நான் அபூ மஸ்வூத்(ரலி) அவர்களிடம், 'இதை நீங்கள் நபி(ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறீர்களா? (அல்லது நீங்களாக இதைக் கூறுகிறீர்களா?') என்று கேட்டதற்கு, அவர்கள் 'நபி(ஸல்) அவர்களிடமிருந்தே (இதை அறிவிக்கிறேன்)' என்று பதிலளித்தார்கள்.3
Volume :6 Book :69
5352. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
அல்லாஹ், 'ஆதமின் மகனே! (-மனிதனே! மற்றவர்களுக்காகச்) செலவிடு; உனக்கு செலவிடுவேன்' என்று கூறினான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.4
Volume :6 Book :69
5353. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
(கணவனை இழந்த) கைம்பெண்ணுக்காகவும் ஏழைக்காகவும் பாடுபடுகிறவர், 'இறைவழியில் அறப்போர் புரிபவரைப் போன்றவராவார்' அல்லது 'இரவில் நின்று வணங்கிப் பகலில் நோன்பு நோற்பவரைப் போன்றவராவார்'.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
Volume :6 Book :69
5354. 
Volume : Book :
5355. அபூ ஸாலிஹ் தக்வான் அஸ்ஸம்மான்(ரஹ்) கூறினார்
நபி(ஸல்) அவர்கள் '(ஒருவர் தமக்குத் தேவையானது போக மீதத்தை) தன்னிறைவான நிலையில் செய்யும் தர்மமே சிறந்ததர்மமாகும். மேலேயுள்ள (கொடுக்கும்) கைதான், தாழ்ந்துள்ள (வாங்கும்) கையை விடச் சிறந்ததாகும். உன் வீட்டாரிடமிருந்தே (உன் தர்மத்தை) நீ தொடங்கு!' என்று கூறினார்கள்7 என அபூ ஹுரைரா(ரலி) கூறிவிட்டு, '(கணவனிடம்) மனைவி, 'எனக்கு உணவளி, அல்லது என்னை மணவிலக்குச் செய்துவிடு' என்று கூறுகிறாள். அடிமை (தன் எசமானிடம்), 'எனக்கு உணவளி. என்னிடம் நீ வேலை வாங்கிக் கொள்!' என்று கூறுகிறான். மகன் (தன் தந்தையிடம்), 'எனக்கு உணவளியுங்கள். (உங்களைவிட்டால் வேறு) யார்தான் எனக்குப் பொறுப்பு?' என்று கூறுகிறான்' எனக் கூறினார்கள். மக்கள், 'அபூ ஹுரைரா(ரலி) அவர்களே! இதையுமா நீங்கள் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றீர்கள்?' என்று கேட்டனர். அதற்கு அவர்கள், 'இல்லை; இது அபூ ஹுரைராவின் (என்னுடைய) கூற்றாகும்' என்று கூறினார்கள்.
Volume :6 Book :69
5356. & 5357. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
தன்னிறைவு பெற்ற நிலையில் (தேவை போக எஞ்சியதை) வழங்குவதே சிறந்த தர்மம் ஆகும். உன் வீட்டாரிடமிருந்தே (உன்னுடைய தர்மத்தைத்) தொடங்கு.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.8
Volume :6 Book :69
5358. முஹம்மது இப்னு ஜுபைர் இப்னி முத்யிம்(ரஹ்) அறிவித்தார்
நான் மாலிக் இப்னு அவ்ஸ்(ரலி) அவர்களிடம் சென்று ('ஃபதக்' சொத்து தொடர்பான பிரச்சினை குறித்துக்) கேட்டேன். அவர்கள் கூறினார்கள்:
நான் ('கலீஃபா) உமர்(ரலி) (அழைத்தன் பேரில் அவர்கள்) இடம் சென்றேன். (சிறிது நேரம் அவர்களிடம் பேசிக் கொண்டிருந்தேன்.) அப்போது உமர்(ரலி) அவர்களின் மெய்க்காவலர் 'யர்ஃபஉ' என்பவர் அவர்களிடம் வந்து, 'உஸ்மான் இப்னு அஃப்பான்(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), ஸுபைர் இப்னு அவ்வாம்(ரலி), ஸஅத் இப்னு அபீ வக்காஸ்(ரலி) ஆகியோர் (தங்களைச் சந்திக்க) அனுமதி கேட்கிறார்கள். தாங்கள் அவர்களுக்கு அனுமதியளிக்கிறீர்களா?' என்று கேட்டார். உமர்(ரலி), 'சரி' என்று கூறி, அவர்களுக்கு (தம்மைச் சந்திக்க) அனுமதியளித்தார்கள். அவர்கள் (அனைவரும்) உள்ளே வந்து, சலாம் (முகமன்) சொல்லி அமர்ந்தார்கள். பிறகு சற்று நேரம் கழித்து யர்ஃபஉ (வந்து) உமர்(ரலி) அவர்களிடம், 'அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் சந்திக்கத் தங்களுக்கு விருப்பமுண்டா?' என்று கேட்டதற்கு உமர்(ரலி), 'ஆம்' என்று அவ்விருவருக்கும் (தம்மைச் சந்திப்பதற்கு) அனுமதியளிக்க, அவ்விருவரும் உள்ளே நுழைந்தனர். இருவரும் சலாம் சொல்லி அமர்ந்தனர்.
அப்பாஸ்(ரலி), 'இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! எனக்கும் இவருக்கும் (அலீக்கும்) இடையே தீர்ப்பளியுங்கள்' என்று கூறினார்கள்.
அப்போது உஸ்மான்(ரலி) அவர்களும் அவர்களின் நண்பர்களும் அடங்கிய குழுவினர், 'இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! (இந்த) இருவரிடையே தீர்ப்பளித்து, ஒருவரின் பிடியிலிருந்து மற்றவரை விடுவித்து விடுங்கள்' என்று கூறினார்கள். அதற்கு உமர்(ரலி), 'பொறுங்கள். எந்த அல்லாஹ்வின் கட்டளையால் வானமும் பூமியும் நிலை பெற்றிருக்கின்றனவோ அவன் பொருட்டால் உங்களிடம் கேட்கிறேன். 'இறைத்தூதர்(ஸல்) அவர்கள் , '(நபிமார்களான எங்களுக்கு) யாரும் வாரிசாக மாட்டார். நாங்கள்விட்டுச் செல்வதெல்லாம் தர்மமே!' என்று இறைத்தூதராகிய தம்மைக் குறித்துச் சொன்னதை நீங்கள் அறிவீர்களா?' என்று (அக்குழுவினரிடம்) கேட்டார்கள். அந்தக் குழுவினர், 'அவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொல்லத்தான் செய்தார்கள்' என்று பதிலளித்தார்கள்.
பிறகு உமர்(ரலி) (வாதியும் பிரதிவாதியுமான) அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் நோக்கி, 'அல்லாஹ்வின் பொருட்டால் உங்கள் இருவரிடமும் கேட்கிறேன்: இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள்.
அவ்விருவரும், '(ஆம்) அவ்வாறு நபி(ஸல்) அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்' என்று பதிலளித்தார்கள்.
உமர்(ரலி), 'அவ்வாறெனில், உங்களிடம் நான் இந்தப் பிரச்சினைக் குறித்துப் பேசுகிறேன். (போரிடாமல் கிடைத்த) இந்த (ஃபய்உ) செல்வத்திலிருந்து சிறிதைத் தன் தூதருக்கு உரியதாக அல்லாஹ் ஆக்கியிருந்தான். அவர்களைத் தவிர வேறெவருக்கும் அவன் அதை அளிக்கவில்லை' (என்று கூறிவிட்டு,) 'அல்லாஹ் எச்செல்வத்தை (எதிரிகளான) அவர்களின் பிடியிலிருந்து விடுவித்துத் தன் தூதரிடம் திருப்பி அளித்தானோ அச்செல்வம், உங்கள் குதிரைகளையும் ஒட்டகங்களையும் (அறப்போரிடுவதற்காக) நீங்கள் ஓட்டிச் சென்றதால் கிடைத்தன்று. மாறாக, அல்லாஹ், தான் நாடுகிறவர்களின் மீது தன்னுடைய தூதர்களுக்கு அதிகாரம் வழங்குகிறான். மேலும், அல்லாஹ் அனைத்தின் மீதும் பேராற்றல் உள்ளவனாக இருக்கிறான்' எனும் (திருக்குர்ஆன் 59:6 வது) இறைவசனத்தை ஓதினார்கள்.
தொடர்ந்து, 'எனவே இது இறைத்தூதருக்கென ஒதுக்கப்பட்ட செல்வமாகும். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட்டுவிட்டு அதை நபி(ஸல்) அவர்கள் தமக்காகச் சேகரித்துக் கொள்ளவில்லை. அதை உங்களைவிடப் பெரிதாகக் கருதவுமில்லை. அதை உங்களுக்கு வழங்கவே செய்தார்கள். உங்களிடையே வழங்கவே செய்தார்கள். உங்களிடையே அதைப் பரவலாகப் பங்கிட்டார்கள். இறுதியில் (இறைத்தூதர் நிதியான) அதிலிருந்து இச்செல்வம் மட்டுமே மீதமாயிற்று. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் இச்செல்வத்திலிருந்து தம் வீட்டாரின் வருடச் செலவை அவர்களுக்கு வழங்கி வந்தார்கள். அப்படிக் கொடுத்த பிறகு மீதமுள்ளதை எடுத்து, அல்லாஹ்வின் (பாதையில் செலவிடும்) செல்வத்தை எந்த இனங்களில் செலவிடுவார்களோ அவற்றில் (சேமநல நிதியாக வைத்துச்) செலவிட்டு வந்தார்கள். இவ்வாறே இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் செயல்பட்டுவந்தார்கள். எனவே, அல்லாஹ்வின் பொருட்டால் உங்களை கேட்கிறேன்: இதை நீங்கள் அறிவீர்களா?' என்று கேட்டார்கள்.
அதற்கு (அங்கிருந்த குழுவினரான) அவர்கள், 'ஆம் (அறிவோம்)' என்று பதிலளித்தார்கள். (பிறகு) அலீ(ரலி) அவர்களிடமும் அப்பாஸ்(ரலி) அவர்களிடமும், 'உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கிறேன்: நீங்கள் இதை அறிவீர்களா?' என்று கேட்க, அவர்களிருவரும் 'ஆம் (அறிவோம்)' என்று பதிலளித்தார்கள்.
(தொடர்ந்து உமர்(ரலி),) 'பிறகு அல்லாஹ் தன் தூதரை அழைத்துக் கொண்டான். அப்போது (ஆட்சித் தலைவராகத் தேர்வு செய்யப்பட்ட) அபூ பக்ர்(ரலி), 'நான் அல்லாஹ்வின் தூதருடைய (ஆட்சிக்குப்) பிரதிநிதியாவேன்' என்று கூறி அ(ந்தச் செல்வத்)தைத் தம் கைவசம் எடுத்துக்கொண்டார்கள். அது விஷயத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் செயல்பட்டதைப் போன்றே தாமும் செயல்பட்டார்கள்' (என்று கூறிவிட்டு,) அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ருலி) அவர்களையும் நோக்கி உமர்(ரலி), 'அப்போதும் நீங்கள் இருவரும் அபூ பக்ர்(ரலி) இப்படி இப்படி(ச் சொல்கிறார்கள்; இறைத்தூதர் நிதியான எங்களுடைய சொத்தைத் தர மறுக்கிறார்கள்)' என்று சொன்னீர்கள்! (ஆனால்,) அபூ பக்ர்(ரலி) அந்த விஷயத்தில் உண்மையே கூறினார்கள்; நல்ல விதமாக நடந்து கொண்டார்கள்; நேர்வழி நடந்து வாய்மையையே பின்பற்றினார்கள் என்பதை அல்லாஹ் அறிவான். பிறகு அபூ பக்ர்(ரலி) அவர்களையும் அல்லாஹ் அழைத்துக்கொண்டான்.
அப்போது (ஆட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்ட) நான் 'அல்லாஹ்வின் தூதரு(டைய ஆட்சி)க்கும் அபூ பக்ர்(ரலி) அவர்களுக்கும் பிரதிநிதியாவேன்' என்று கூறி அ(ந்தச் செல்வத்)தை என்னுடைய ஆட்சிக் காலத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு என் கைவசம் எடுத்துக்கொண்டேன். இறைத்தூதர்(ஸல்) அவர்களும் (அவர்களுக்குப் பிறகு) அபூ பக்ர்(ரலி) அவர்களும் நடந்து கொண்ட முறைப்படி நானும் செய்லபட்டு வந்தேன்.
பிறகு நீங்கள் இருவரும் (இச்செல்வம் தொடர்பாகப் பேச) என்னிடம் வந்தீர்கள். உங்களிருவரின் பேச்சும் ஒன்றாகவே இருந்தது; இருவரின் நிலையும் ஒன்றுபட்டதாகவே இருந்தது.
'(அப்பாஸே!) நீங்கள் என்னிடம் உங்கள் சகோதரர் புதல்வரிடமிருந்து (-நபியிடமிருந்து) உங்களுக்குச் சேரவேண்டிய (வாரிசுப்) பங்கைக் கேட்டபடி வந்தீர்கள்.
(இதோ!) இவரும் (அலீயும்) என்னிடம் தம் மனைவிக்கு அவரின் தந்தை (ஆகிய நபி)யிடமிருந்து கிடைக்க வேண்டிய பங்கைக் கேட்டபடி வந்தார். அப்போது (உங்கள் இருவரிடமும்) நான் 'நீங்கள் இருவரும் விரும்பினால், அல்லாஹ்விடம் செய்த ஒப்பந்தமும் அவனுக்களித்த உறுதிமொழியும் உங்கள் பொறுப்பாக இருக்க, 'அதன் விஷயத்தில், இறைத்தூதர்(ஸல்) அவர்களும், அபூ பக்ர்(ரலி), செயல்பட்டவாறும், நான் ஆட்சிக்கு வந்ததிலிருந்து செயல்பட்படியுமே நீங்கள் இருவரும் செயல்பட வேண்டும்' எனும் நிபந்தனையின் அடிப்படையில் உங்கள் இருவரிடமும் இச்செல்வத்தை ஒப்படைத்துவிடுகிறேன். அவ்வாறில்லையாயின், இது தொடர்பாக என்னிடம் நீங்கள் இருவரும் பேச வேண்டாம்' என்று சொன்னேன். அதற்கு நீங்கள் இருவரும் 'அ(ந்)த (நிபந்தனையி)ன் அடிப்படையில் அதை எங்களிடம் ஒப்படைத்துவிடுங்கள்' என்று சொன்னீர்கள். அதன்படியே அ(ச்செல்வத்)தை உங்கள் இருவரிடமும் நான் ஒப்படைத்தேன்' என்று கூறினார்கள்.
பிறகு (அங்கிருந்த குழுவினரிடம்), 'அல்லாஹ்வின் பெயரால் உங்களிடம் கேட்கிறேன்: நான் அ(ச் செல்வத்)தை இவர்கள் இருவரிடமும் அ(ந்)த (நிபந்தனையி)ன்படியே ஒப்படைத்தேனா? (இல்லையா?)' என்று கேட்க, அதற்கு அக்குழுவினர் 'ஆம்' என்றார்கள்.
அலீ(ரலி) அவர்களையும் அப்பாஸ்(ரலி) அவர்களையும் நோக்கி உமர்(ரலி), 'நான் உங்கள் இருவரையும் அல்லாஹ்வின் பொருட்டால் கேட்கிறேன்: நான் அ(ச் செல்வத்)தை உங்கள் இருவரிடமும் அ(ந்)த நிபந்தனையி)ன் படியே ஒப்படைத்தேனா? (இல்லையா?)' என்று கேட்க, அவ்விருவரும் 'ஆம்' என்று பதிலளித்தார்கள்.
உமர்(ரலி) 'இதைத் தவிர வேறொரு தீர்ப்பை நீங்கள் என்னிடம் கோருகிறீர்களா? எவனுடைய கட்டளையால் வானமும் பூமியும் நிலைபெற்றுள்ளனவோ அவன் மீது சத்தியமாக! நான் இந்த விஷயத்தில் இதைத் தவிர வேறெந்த தீர்ப்பையும் மறுமை நாள் நிகழும்வரை அளிக்கமாட்டான். உங்கள் இருவராலும் அதைப் பராமரிக்க முடியாவிட்டால், என்னிடம் அதை ஒப்படைத்துவிடுங்கள். அதை உங்களுக்கு பதிலாக நானே பராமரித்துக் கொள்வேன்' என்று கூறினார்கள். 10
Volume :6 Book :69
5359. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
(ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா(ரலி) (நபி(ஸல்) அவர்களிடம்) வந்து, 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒருவர்; அவருக்குரிய (செல்வத்)திலிருந்து எங்கள் பிள்ளைகளுக்கு நான் உணவளித்தால் அது என் மீது குற்றமாகுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'நியாயமன அளவு தவிர (அவ்வாறு செய்ய) வேண்டாம்' என்று பதிலளித்தார்கள்.
Volume :6 Book :69
5360. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
ஒரு பெண், தன் கணவனின் சம்பாத்தியத்திலிருந்து அவனுடைய உத்தரவின்றி (அறவழியில்) செலவிட்டால், அதன் பிரதிபலனில் பாதி அவனுக்கும் கிடைக்கும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். 11
Volume :6 Book :69
5361. அலீ(ரலி) அறிவித்தார்
(என் துணைவி) ஃபாத்திமா திரிகை சுற்றுவதால் தம் கையில் ஏற்பட்ட காய்ப்பு குறித்து (தம் தந்தை) நபி(ஸல்) அவர்களிடம் முறையிடுவதற்காகச் சென்றார்கள். ஏனெனில், (போர்க் கைதிகளான) அடிமைகள் சிலர் நபி(ஸல்) அவர்களிடம் வந்திருப்பதாக அவருக்குச் செய்தி வந்திருந்தது. ஆனால், ஃபாத்திமா நபி(ஸல்) அவர்களைக் காணவில்லை. தாம் வந்த நோக்கத்தை ஆயிஷா(ரலி) அவர்களிடம் ஃபாத்திமா கூறினார்கள். நபி(ஸல்) அவர்கள் (வீட்டிற்கு) வந்தபோது, ஆயிஷா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் விவரத்தைத் தெரிவிக்கவே, நபி அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது நாங்கள் எங்கள் படுக்கைக்குச் சென்றுவிட்டிருந்தோம். (நபியவர்களைப் பார்த்த) உடனே, நாங்கள் எழுந்திருக்கப்போனோம். அவர்கள், 'நீங்கள் இருவரும் உங்கள் இடத்திலேயே இருங்கள்' என்று சொல்லிவிட்டு, அவர்களே வந்து எனக்கும் ஃபாத்திமாவுக்கும் இடையே அமர்ந்தார்கள். அவர்களின் பாதங்கள் என் வயிற்றில் பட்டு அதன் குளிர்ச்சியை நான் உணரும் அளவுக்கு (நெருக்கமாக அமர்ந்தார்கள்.) அப்போது அவர்கள், 'நீங்கள் இருவரும் கேட்டதைவிடச் சிறந்ததை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? 'நீங்கள் இருவரும் உங்கள் படுக்கைக்குச் செல்லும்போது' அல்லது 'உங்கள் விரிப்புக்குச் செல்லும் போது' முப்பத்து மூன்று முறை 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை 'அல்ஹம்துலில்லாஹ்' (அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்லுங்கள். அது உங்களுக்குப் பணியாள் ஒருவர் இருப்பதை விடச் சிறந்ததாகும்' என்று கூறினார்கள். 15
Volume :6 Book :69
5362. அலீ இப்னு அபீ தாலிப்(ரலி) அறிவித்தார்
ஃபாத்திமா அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் பணியாள் ஒருவரைக் கேட்டுச் சென்றார்கள். அப்போது நபி(ஸல்) அவர்கள், 'அதைவிடச் சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கட்டுமா? நீ உறங்கும்போது முப்பத்து மூன்றுமுறை 'சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் மிகத் தூயவன்) என்றும், முப்பத்து மூன்று முறை 'அல்ஹம்துலில்லாஹ்' (அல்லாஹுவுக்கே புகழ் அனைத்தும்) என்றும், முப்பத்து நான்கு முறை 'அல்லாஹு அக்பர்' (அல்லாஹ் மிகப் பெரியவன்) என்றும் சொல்' என்று கூறினார்கள். 16
(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் இப்னு உயையனா(ரஹ்) கூறினார்:
இந்த மூன்றில் (ஏதோ) ஒன்று முப்பத்து நான்கு (முறை ஓத வேண்டியது) ஆகும்.
(தொடர்ந்து அலீ(ரலி)) 'இவற்றை (நபி(ஸல்) அவர்களிடம் கேட்ட) பின்னால் (ஒரு நாளும் ஓதாமல்) நான்விட்டதில்லை' என்று கூறினார்கள். அவர்களிடம், 'ஸிஃப்பீன்' போரின் இரவில் கூடவாவிட்டதில்லை? என்று கேட்கப்பட்டது. அவர்கள், 'ஆம்; ஸிஃப்பீன் போரின் இரவில் கூடத்தான்' என்று பதிலளித்தார்கள்.
Volume :6 Book :69
5363. அஸ்வத் இப்னு யஸீத்(ரஹ்) அறிவித்தார்
நான் ஆயிஷா(ரலி) அவர்களிடம் 'நபி(ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்?' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா(ரலி), 'நபி(ஸல்) அவர்கள் தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்துவந்தார்கள். தொழுகை அறிவிப்பை (பாங்கு சப்தத்தை)ச் செவிமடுத்தால் (தொழுகைக்காகப்) புறப்பட்டு விடுவார்கள்' என்று பதிலளித்தார்கள். 17
Volume :6 Book :69
5364. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
(ஒரு முறை) ஹிந்த் பின்த் உத்பா(ரலி), நபி(ஸல்) அவர்களிடம் 'இறைத்தூதர் அவர்களே! (என் கணவர்) அபூ சுஃப்யான் கருமியான ஒருவர். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான (பணத்)தை அவர் தருவதில்லை. நான் அவரிடமிருந்து அவருக்குத் தெரியாமல் எடுத்துக் கொண்டதைத் தவிர (போதுமான தொகையை அவராகத் தரமாட்டார்)' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'உனக்கும் உன் குழந்தைக்கும் போதுமானதை நியாயமான அளவுக்கு நீ எடுத்துக்கொள்!' என்று கூறினார்கள். 18
Volume :6 Book :69
5365. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
'ஒட்டகத்தில் பயணம் செய்த (அரபுப்) பெண்மணிகளிலேயே சிறந்தவர்கள் குறைஷிப் பெண்களேயாவர்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
(அறிவிப்பாளர்களில் இப்னு தாவூஸ், அபுஸ்ஸினாத் ஆகிய இருவரில்) ஒருவரின் அறிவிப்பில் காணப்படுவதாவது:
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(ஒட்டகத்தில் பயணம் செய்த அரபுப் பெண்களிலேயே சிறந்தவர்கள்) நல்ல குறைஷிக் குலப் பெண்களாவர். அவர்கள் குழந்தைகளின் மீது அதிகப் பாசம் கொண்டவர்கள்; தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக் காப்பவர்கள் ஆவர். 19
முஆவியா(ரலி) மற்றும் இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோரிடமிருந்து இவ்வாறே அறிவிக்கப்பட்டுள்ளது.
Volume :6 Book :69
5366. அலீ(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கோடு போட்ட பட்டு அங்கி ஒன்றை (அன்பளிப்பாக) வழங்கினார்கள். எனவே, அதை நான் அணிந்து கொண்டேன். (இதைக் கண்ட) நபி(ஸல்) அவர்களின் முகத்தில் கோபக் குறியை பார்த்தேன். உடனே, அதைப் பல துண்டுகளாக்கி எங்கள் (குடும்பப்) பெண்களிடையே பங்கிட்டுவிட்டேன்.
Volume :6 Book :69
5367. ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்
என் தந்தை (உஹுதுப் போரில்) இறந்துவிட்டார்கள். (இறக்கும்போது) 'ஏழு பெண் குழந்தைகளை' அல்லது 'ஒன்பது பெண் குழந்தைகளை'விட்டுச் சென்றார்கள். எனவே, (கன்னி கழிந்த) ஒரு பெண்ணை நான் மணமுடித்துக் கொண்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னிடம், 'ஜாபிரே! நீ மணமுடித்துக்கொண்டாயா?' என்று கேட்டார்கள். நான் 'ஆம்' என்று சொன்னேன். அவர்கள், 'கன்னிப் பெண்ணையா? கன்னி கழிந்த பெண்ணையா (யாரை மணந்தாய்)?' என்று கேட்டார்கள். நான், 'இல்லை; கன்னி கழிந்த பெண்ணைத் தான் (மணந்தேன்)' என்று பதிலளித்தேன். நபி(ஸல்) அவர்கள், 'கன்னிப் பெண்ணை மணந்து, நீ அவளுடனும் அவள் உன்னுடனும் கூடிக் குலாவி விளையாடலாமே; நீ அவளுக்கும் அவள் உனக்கும் மகிழ்வூட்டலாமே!' என்று கூறினார்கள்.
அதற்கு நான் நபி(ஸல்) அவர்களிடம், '(என் தந்தை) அப்துல்லாஹ்(ரலி), பல பெண் மக்களைவிட்டுவிட்டு இறந்துவிட்டார்கள். (வயதில்) அந்தப் பெண் மக்களைப் போன்ற ஒரு (இளம் வயதுப்) பெண்ணை (மணமுடித்து) அவர்களிடம் அழைத்துச் செல்வதை நான் விரும்பவில்லை. எனவே, நான் அவர்களைப் பராமரித்துச் சீராட்டி வளர்க்கும் (அனுபவமுள்ள) ஒரு பெண்ணை மணந்துகொண்டேன்' என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் உனக்கு 'சுபிட்சத்தை அளிப்பானாக' அல்லது 'நன்மையைப் பொழிவானாக' என்று கூறினார்கள்.
Volume :6 Book :69
5368. அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து, 'நான் அழிந்துவிட்டேன்' என்ற கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'ஏன் (என்ன நடந்தது)?' என்று கேட்டார்கள். அவர், 'நான் ரமளான் மாதத்தில் (பகலில்) என் மனைவியுடன் தாம்பத்திய உறவு கொண்டுவிட்டேன்' என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஓர் அடிமையை விடுதலை செய்து விடுவீராக' என்று கூறினார்கள். அதற்கு அவர் 'என்னிடம் அடிமை இல்லையே!' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் 'அப்படியென்றால், தொடர்ந்து இரண்டு மாதங்கள் நோன்பு நோற்பீராக' என்று கூறினார்கள். அதற்கு அவர், 'அது என்னால் இயலாது' என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், 'அப்படியென்றால், அறுபது ஏழைகளுக்கு உணவளிப்பீராக' என்று கூறினார்கள். அம்மனிதர், 'என்னிடம் வசதி இல்லையே!' என்று கூறினார். அப்போது நபி(ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் உள்ள ஒரு கூடை (அரக்) கொண்டு வரப்பட்டது. உடனே அவர்கள், 'கேள்வி கேட்டவர் எங்கே?' என்று கேட்டார்கள். அவர், 'இதோ! நானே அது' என்று பதிலளித்தார். நபி(ஸல்) அவர்கள், 'இதை தர்மம் செய்யுங்கள்' என்று கூறினார்கள். அதற்கு அவர் 'எங்களை விட அதிகத் தேவையுள்ள ஒருவருக்கா தர்மம் செய்யச் சொல்கிறீர்கள்? இறைத்தூதர் அவர்களே! உங்களை சத்தியத்துடன் அனுப்பிய (இறை)வன் மீது ஆணையாக! மதீனாவின் இரண்டு மலைகளுக்கிடையே எங்களைவிட அதிகத் தேவையுள்ள குடும்பத்தார் எவரும் இல்லை' என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் தம் கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, 'அப்படியென்றால் நீங்கள்தாம் (அதற்கு உரியவர்கள்)' என்று கூறினார்கள்.
Volume :6 Book :69
5369. (நபி(ஸல்) அவர்கள் துணைவியாரான) உம்மு ஸலமா(ரலி) அறிவித்தார்
(நபி(ஸல்) அவர்களிடம்) நான், 'இறைத்தூதர் அவர்களே! என் (முதல் கணவரான) அபூ ஸலமாவின் பிள்ளைகளுக்குச் செலவழிப்பதால் எனக்கு நன்மை உண்டா? நான் அவர்களை இன்னின்னவாறு (தேவை உள்ளவர்களாக)விட்டுவிட விரும்பவில்லை. அவர்களும் என் பிள்ளைகளே!' என்று கேட்டேன். நபி(ஸல்) அவர்கள், 'ஆம்! அவர்களுக்காக நீ செலவிட்ட(ால் அ)தற்கான நன்மை உனக்கு உண்டு' என்று பதிலளித்தார்கள்.
Volume :6 Book :69
5370. ஆயிஷா(ரலி) அறிவித்தார்
(அபூ சுஃப்யான்(ரலி) அவர்களின் துணைவியாரான) ஹிந்த் பின்த் உத்பா(ரலி) (நபி(ஸல்) அவர்களிடம் வந்து) 'இறைத்தூதர் அவர்களே! அபூ சுஃப்யான் கருமியான ஒருவர். எனக்கும் என் குழந்தைக்கும் போதுமான(பணத்)தை அவரின் செல்வத்திலிருந்து நான் எடுத்துக்கொள்வதால் என்மீது குற்றம் உண்டாகுமா?' என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் 'நியாயமான அளவிற்கு நீ எடுத்துக்கொள்' என்று கூறினார்கள்.
Volume :6 Book :69

இஃதிகாஃப்


2025. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
"நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்!"
Volume :2 Book :33
2026. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
"நபி(ஸல்) அவர்கள் மரணிக்கும் வரை ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்; அவர்களுக்குப் பின், அவர்களின் மனைவியர் இஃதிகாஃப் இருந்தனர்!"
Volume :2 Book :33
2027. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ரமளானில் நடுப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும். அந்த இரவின் காலையில்தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவார்கள். 'யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாள்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது! (அந்தக் கனவில்) காலை நேரத்தில் ஈரமான மண்ணில் நான் ஸஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாள்களில் தேடுங்கள். (அந்த நாள்களின்) ஒவ்வொரு ஒற்றைப் படை இரவிலும் அதைத் தேடுங்கள்!' எனக் கூறினார்கள். அன்றிரவு மழை பொழிந்தது. அன்றைய பள்ளிவாயில் (ஈச்சை ஓலைக்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. எனவே, பள்ளிவாயில் ஒழுகியது. இருபத்தொன்றாம் நாள் ஸுப்ஹுத் தொழுகையில் நபி(ஸல்) அவர்களின் நெற்றியிலே ஈரமான களிமண் படிந்திருந்ததை என்னுடைய இரண்டு கண்களும் பார்த்தன.
Volume :2 Book :33
2028. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும்போது தம் தலையை (வீட்டிலிருக்கும்) என் பக்கம் நீட்டுவார்கள்; மாதவிடாய் ஏற்பட்டிருக்கும் நிலையில் அதை நான் வாருவேன்.
Volume :2 Book :33
2029. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள்; நான் அதை வாருவேன், இஃதிகாஃப் இருக்கும்போது தேவையிருந்தால் தவிர வீட்டிற்குள் வரமாட்டார்கள்.
Volume :2 Book :33
2030. & 2031. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னை அணைப்பார்கள். அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது பள்ளியிலிருந்து தம் தலையை நீட்டுவார்கள்; மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் அவர்களின் தலையைக் கழுவுவேன்.
Volume :2 Book :33
2032. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
'மஸ்ஜிதுல் ஹராமில் ஓர் இரவு இஃதிகாஃப் இருப்பதாக அறியாமைக் காலத்தில் நான் நேர்ச்சை செய்திருந்தேன்' என்று உமர்(ரலி) அவர்களிடம் கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள், 'உம்முடைய நேர்ச்சையை நிறைவேற்றும்" என்றார்கள்.
Volume :2 Book :33
2033. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ரமலானின் கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். நான் அவர்களுக்காக (பள்ளியில்) ஒரு கூடாரத்தை அமைப்பேன். ஸுப்ஹுத் தொழுதுவிட்டு அதற்குள் நுழைந்து விடுவார்கள். ஹஃப்ஸா(ரலி) என்னிடம் தமக்கொரு கூடாரம் அமைக்க அனுமதி கேட்டார். அவருக்கு நான் அனுமதி கொடுத்தேன். அவர் ஒரு கூடாரத்தை அமைத்தார். இதை ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) பார்த்தபோது அவர் மற்றொரு கூடாரத்தை அமைத்தார். நபி(ஸல்) அவர்கள் காலையில் எழுந்தபோது பள்ளியினுள் பல கூடாரங்களைக் கண்டு, 'இவை என்ன?' என்று கேட்டார்கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. நபி(ஸல்) அவர்கள், 'இதன் மூலம் நீங்கள் நன்மையைத்தான் நாடுகிறீர்களா?' என்று கேட்டுவிட்டு, அந்த மாதம் இஃதிகாஃப் இருப்பதைவிட்டுவிட்டார்கள். பிறகு ஷவ்வால் மாதம் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தார்கள்.
Volume :2 Book :33

லைலத்துல் கத்ரின் சிறப்பு

2014. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!"
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.                                            
2015. இப்னு உமர்(ரலி) அறிவித்தார். 

நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் (வந்த) கனவில் லைலத்துல் கத்ர்(இரவு) காட்டப்பட்டது; அப்போது, நபி(ஸல்) அவர்கள் 'உங்கள் கனவுகள் கடைசி ஏழு நாள்களில் (லைலத்துல் கத்ரைக் கண்ட விஷயத்தில்) ஒத்து அமைந்திருப்பதை காண்கிறேன்! எனவே, அதைத் தேடுபவர். (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் அதைத் தேடட்டும்!" என்று கூறினார்கள்.                         2016. அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். 

நாங்கள் நபி(ஸல்) அவர்களுடன் ரமளானின் நடுப்பக்கத்தில் இஃதிகாஃப் இருந்தோம். அவர்கள் இருபதாம் நாள் காலையில் வெளியே வந்து எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அவ்வுரையில்) 'எனக்கு லைலத்துல் கத்ர் இரவு காண்பிக்கப்பட்டது; பின்னர், அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது. எனவே, நீங்கள் கடைசிப்பத்து நாள்களின் ஒற்றைப் படை இரவுகளில் அதைத் தேடுங்கள்! நான் (லைலத்துல் கத்ரில்) ஈரமான களி மண்ணில் ஸஜ்தா செய்வது போல் (கனவு) கண்டேன்! எனவே, யார் என்னோடு இஃதிகாஃப் இருந்தாரோ அவர் திரும்பவும் வரட்டும்!" என்றார்கள். நாங்கள் திரும்பச் சென்றோம். வானத்தில் ஒரு மெல்லிய மேகப் பொதியைக் கூட அப்போது நாங்கள் காணவில்லை. திடீர் என ஒரு மேகம் தோன்றி மழை பொழிந்தது. அதனால், பள்ளிவாசலின் கூரையில் தண்ணீர் ஒழுகியது. அந்தக் கூரை பேரீச்சை மட்டையிலினால் அமைந்திருந்தது. தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டதும் நபி(ஸல்) அவர்களை ஈரமான களிமண்ணில் ஸஜ்தா செய்யும் நிலையில் கண்டேன். அவர்களின் நெற்றியில் களிமண்ணின் அடையாளத்தை பார்த்தேன். 
Volume :2 Book :32

2017. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.Volume :2 Book :32

2018. அபூ ஸயீத் அல் குத்ரீ(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள், ரமளான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; இருபதாம் இரவு கழிந்து மாலையாகி, இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தம் இல்லம் திரும்புவார்கள்; அவர்களுடன் இஃதிகாஃப இருந்தவர்களும் திரும்புவார்கள். இவ்வழக்கப்படி நபி(ஸல்) அவர்கள் இரண்டு மாதம், எந்த இரவில் இல்லம் திரும்புவார்களோ அந்த இரவில் தங்கி மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அல்லாஹ் நாடிய விஷயங்களை அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள். பின்னர், 'நான் இந்தப் பத்து நாள்கள் இஃதிகாஃப் இருந்தேன்; பிறகு கடைசிப் பத்து நாள்களில் இஃதிகாஃப் இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றியது; எனவே, என்னுடன் இஃதிகாஃப் இருந்த இடத்திலேயே தங்கியிருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்குக் காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டுவிட்டது; எனவே, கடைசிப்பத்து நாள்களில் அதைத் தேடுங்கள்! (அந்த நாள்களிலுள்ள) ஒவ்வொரு ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள்! நான் ஈரமான களிமண்ணில் (அந்த இரவில்) ஸஜ்தா செய்வதுபோல் (கனவு) கண்டேன்!' எனக் குறிப்பிட்டார்கள். அந்த இரவில் வானம் இரைச்சலுடன் மழை பொழிய, பள்ளிவாசல் (கூரையிலிருந்து) நபி(ஸல்) அவர்கள் தொழும் இடத்தில் (மழை நீர்) சொட்டியது. இருபத்தொன்றாம் இரவில் நடந்த இதை. நான் என் கண்களால் பார்த்தேன்! மேலும், நபி(ஸல்) அவர்கள் தங்களின் முகத்தில் ஈரமான களிமண் நிறைந்திருக்க, ஸுப்ஹு தொழுதுவிட்டுத் திரும்புவதையும் கண்டேன்.Volume :2 Book :32

2019. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"(லைலத்துல் கத்ரை) தேடுங்கள்!" என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.Volume :2 Book :32

2020. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் ரமளானின் கடைசிப்பத்து நாள்களில் இஃதிகாஃப் இருப்பார்கள்; 'ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!" எனக் கூறுவார்கள்.Volume :2 Book :32

2021. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ரமளானின் கடைசிப் பத்து நாள்களில் லைலத்துல் கத்ரை தேடுங்கள்! 'லைலத்துல் கத்ரை இருபத்தொன்றாவது இரவில், இருபத்து மூன்றாவது இரவில், இருபத்து ஐந்தாவது இரவில் தேடுங்கள்!" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.Volume :2 Book :32

2022. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"லைலத்துல் கத்ர் இரவு கடைசிப் பத்து நாள்களில் உள்ளது; அது இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ உள்ளது!" என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். "இருபத்து நான்காவது இரவில் அதைத் தேடுங்கள்!" என்று இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்.Volume :2 Book :32

2023. உபாதா இப்னு ஸாமித்(ரலி) அறிவித்தார்.
லைலத்துல் கத்ர் பற்றி எங்களுக்கு அறிவிப்பதற்காக நபி(ஸல்) அவர்கள் புறப்பட்டார்கள். அப்போது இரண்டு முஸ்லிம்கள் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள், 'லைலத்துல் கத்ரை உங்களுக்கு அறிவிப்பதற்காக நான் புறப்பட்டேன்; அப்போது இன்னாரும் இன்னாரும் சச்சரவு செய்து கொண்டிருந்தனர். எனவே, அது (பற்றிய விளக்கம்) நீக்கப்பட்டுவிட்டது! அது உங்களுக்கு நன்மையாக இருக்கலாம்! எனவே, அதை இருபத்தொன்பதாம் இரவிலும், இருபத்தேழாம் இரவிலும், இருபத்தைந்தாம் இரவிலும் தேடுங்கள்!" எனக் கூறினார்கள்.Volume :2 Book :32

2024. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
(ரமளானின் கடைசிப்) பத்து நாள்கள் வந்துவிட்டால் நபி(ஸல்) அவர்கள் இல்லறத் தொடர்பை நிறுத்திக் கொள்வார்கள்; இரவை (அல்லாஹ்வைத் தொழுது) உயிர்ப்பிப்பார்கள்; (இறைவனை வணங்குவதற்காகத்) தம் குடும்பத்தினரை எழுப்பிவிடுவார்கள்!"Volume :2 Book :32