திருமணத்துக்கு பத்திரிகை அடிக்கலாமா?




திருமணத்துக்கு பத்திரிகை அடிக்கலாமா? பதில்: பத்திரிகை அடித்தல், திருமண மண்டபம் பிடித்தல் போன்றவை நபிகள் நாயகம் ஸல் அவர்கள் காலத்தில் இல்லாமல் பிற்காலத்தில் உருவானதாகும். இதற்கு நேரடியான அனுமதியை அல்லது நேரடியான தடையை நாம் குர்ஆனிலோ ஹதீஸ்களிலோ காண முடியாது. ஆனாலும் இஸ்லாமியத் திருமணத்துக்கு என பொதுவான ஒழுங்கும் நெறியும் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. அதற்கு முரணில்லாத வகையில் தான் திருமணத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். குறைந்த செலவில் நடத்தப்பட வேண்டும் என்பதும் அந்த விதிகளில் ஒன்றாகும். பத்திரிகை பெரும்பாலும் தேவை இல்லை என்றாலும் சில நேரங்களில் பத்திரிகை அவசியம் என்ற நிலை ஏற்பட்டால் சாதாரண காகிதத்தில் குறைந்த செலவில் அச்சிட்டுக் கொண்டால் அது குற்றமாகாது. ஆனால் இன்று பத்திரிகைக்கு செய்யப்படும் செலவு அல்லாஹ்வுக்கு கோபத்தை ஏற்படுத்தும் அளவுக்கு உள்ளது. ஒரு பத்திரிகைக்கு செய்யப்படும் செலவில் ஒரு மனிதனுக்கு வயிறார உணவு வழங்க முடியும். அந்த அளவுக்கு பணம் விரயமாக்கப்படுகிறது. படர விடப்பட்ட, மற்றும் படர விடப்படாத தோட்டங்களையும், பேரீச்சை மரங்களையும், மாறுபட்ட உணவான தானியங்களையும், (தோற்றத்தில்) ஒன்றுபட்டும் (தன்மையில்) வேறுபட்டும் உள்ள மாதுளை மற்றும் ஒலிவ மரங்களையும் அவனே படைத்தான். அவை பலன் தரும் போது அதன் பலனை உண்ணுங்கள்! அதை அறுவடை செய்யும் நாளில் அதற்குரிய (ஸகாத் எனும்) கடமையை வழங்கி விடுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் நேசிக்க மாட்டான். திருக்குர்ஆன் 6:141 ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்! உண்ணுங்கள்! பருகுங்கள்! வீண் விரயம் செய்யாதீர்கள்! வீண் விரயம் செய்வோரை அவன் விரும்ப மாட்டான். திருக்குர்ஆன் 7:31 அவர்கள் செலவிடும் போது விரையம் செய்ய மாட்டார்கள். கஞ்சத்தனமும் செய்ய மாட்டார்கள். அதற்கு இடைப்பட்ட நிலையாகவே அது இருக்கும். திருக்குர்ஆன் 25:67 உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரவரின் உரிமையை வழங்குவீராக! ஒரேயடியாக வீண் விரயம் செய்து விடாதீர்! விரயம் செய்வோர் ஷைத்தான்களின் உடன்பிறப்புக்களாக உள்ளனர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். திருக்குர்ஆன் 17:26, 27 பத்திரிகை அடிக்கும் போதும் மண்டபங்கள் பிடிக்கும் போதும் இந்த வசனங்களுடன் நம்முடைய செயலைப் பொருத்திப் பாருங்கள். நாம் செய்யும் இச்செயலை மனிதர்கள் முன்னால் எதையாவது கூறி நியாயப்படுத்த முடியும். படைத்த இறைவனிடம் அது எடுபடுமா என்று சிந்தியுங்கள். எடுபடாது என்றால் அதைத் தவிர்த்து விடுங்கள். ஷைத்தானின் உற்ற நண்பன் என்ற பட்டம் நமக்கு வேண்டாம்.

பருவப் பெண்களும் BOY FRIEND தொல்லைகளும்!

இப்பொழுதெல்லாம், பருவ வயதுப் பெண்கள் `பாய்ஃபிரண்ட்’ உடன் சுற்றித் திரிவதை இயல்பாக பார்க்க முடிகிறது. ஆண் நண்பர்களை தங்கள் அழகுக்கு கிடைத்த அங்கீகாரமாக அனேக பெண்கள் நினைக்கிறார்கள். பாய் ஃபிரண்ட் இல்லையென்று வருத்தப்படும் பெண்களும் உண்டு. பாய்ஃபிரண்டுகளுடன் இருப்பதே `ஜாலி` என்ற நினைப்பும் பெண்களிடம் இருக்கிறது.
இளம்பெண்கள் இப்படி நினைத்துக் கொண்டிருக்க, பெற்றோருக்குள் எப்போதுமே பிள்ளைகள் மீது உரிமையுள்ள பொறுமல் இருந்து கொண்டுதான் இருக்கிறது. `ஆண் பெண் நட்பால் கலாசாரமே சீரழிந்து வருகிறது` என்ற எண்ணமும் சமூகத்தினரிடையே உள்ளது. அது உன்மையும் கூட.

உண்மையில் பாய்ஃபிரண்ட் நட்பு, பருவப் பெண்களுக்கு பாதுகாப்பானதா?

பள்ளி – கல்லூரிகளில் ஆண், பெண் இருவரும் சேர்ந்து படிக்கிறார்கள். இது குழந்தைப் பருவத்திலேயே இயல்பாக பழகும் வாய்ப்பை ஏற்படுத்தி தருகிறது. ஆணும் பெண்ணும் சமூகத்தில் சமமாக, ஒன்றாக இருப்பது நல்லதுதான் என்றாலும், இப்படி இருக்கும்போது ஏற்படும் புரிதலும், தெளிவும் இல்லாத பழக்கம்தான் இன்றைய சீரழிவு நிலைக்கு முக்கிய காரணம்.

பருவ வயது ஆரம்பிக்கும் டீன்ஏஜ் பருவத்தில்தான் எதிர்பாலினர் மீது கூடுதல் ஈர்ப்பு தொடங்குகிறது. அப்போது பள்ளி செல்லுதல், டியூசன் செல்லுதல் போன்ற நேரங்களில் ஆண்களை சந்திக்கும் வாய்ப்புகள் அதிகமாக கிடைக்கிறது. இயல்பாக பழகியும் விடுகிறார்கள்.

குழந்தைப் பருவத்தில் இருந்து பள்ளிப் பருவத்துக்குள் கிடைக்கும் ஆண் நண்பர்களாவது ஒரு கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறார்கள். கல்லூரிப் பருவத்தில்தான் இந்த ஆண் பெண் நட்பு வட்டாரம் இன்னும் அதிகமாகிறது. கூடவே பிரச்சினையும் ஆரம்பமாகிறது.

கல்லூரிக்குள் நுழையும்போது சுதந்திரம் அதிகமாகிறது. பெற்றோரின் நேரடி கண்காணிப்பில் இருந்து விலகி வெளியூர்களில் தங்கி படிக்கும் சூழல் அனேகம் பேருக்கு ஏற்படுகிறது. இப்போதெல்லாம் பெண்கள்கூட அருகில் இருக்கும் நகரங்களுக்கு சென்று தங்கியிருந்து படிக்கிறார்கள். இந்த சுதந்திரமான சூழல் ஆண்-பெண் நட்புக்கு இன்னும் சாதகமாகி விடுகிறது. வயதுக்கே உரிய ஈர்ப்பும் சேர்ந்து கொள்ள, அவர்கள் சங்கோஜம் இன்றி சகஜமாகவே பழகுகிறார்கள்.

நட்பு என்கிற ரீதியில் கல்லூரிக்குள் கூட்டமாக அமர்ந்து அரட்டையடிப்பதில் கிடைக்கிறது புதுப்புது நண்பர்களின் பழக்கம். இது மட்டுமல்லாமல் கல்லூரியை விட்டு பெண்கள் வரும் வழியிலும், அவர்கள் அடிக்கடி செல்லும் இடங்களிலும் சந்திக்க நேரும், நட்பாய் பழகநேரும் ஆண்களுடனும் பழக்கம் ஏற்படுகிறது.

இப்படி ஒன்றுக்கு மேற்பட்ட ஆண் நண்பர்களுடன் பழகும் வாய்ப்பு கல்லூரிக்குள்ளும், கல்லூரிக்கு வெளியிலும் இயல்பாகவே பெண்களுக்கு கிடைக்கிறது. சில காலத்துக்கு பிறகு இந்த ஆண் நண்பர்கள் வட்டத்தில் யாராவது ஒருவன் தனக்கு மிகவும் பிடித்தமானவனாக இருக்க, அவன் அவளுக்கு `பெஸ்ட் பிரண்டாக` மாறி விடுகிறான்.

`நல்ல வேலையில் இருக்கிறான், நன்றாக படிக்கிறான், என்னை நேசிக்கிறான், எனக்காக காத்திருக்கிறான், பரிசு வாங்கி தருகிறான், நல்ல நேரத்தில் உதவினான்’ என்று அவர்களுக்கு சாதகமான ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லிக் கொண்டு நேசத்தை வளர்க்கிறார்கள். இந்த நட்பு எல்லை மீறி ஏமாறும்போதுதான் பெண்களுக்கு பிரச்சினை ஏற்படுகிறது.

கல்லூரி வட்டத்தை தாண்டி வெளியில் ஏற்படும் பழக்கம்தான் நிறைய பேரின் வாழ்க்கையை சிதைக்கிறது. அவர்கள் யார்? எவர்? என்ற விவரங்கள் முழுமையாகத் தெரியாது. அவர்கள் சொல்லும் விவரங்கள் உண்மையானதா? என்பதும் தெரியாது. இருந்தாலும் நம்பி விடுகிறார்கள் பெண்கள். பழகும் விதம், தோற்றம், படோடோபம் பார்த்தும் ஏமாந்து விடுகிறார்கள்.

நம்பிக்கை ஏற்பட்ட பிறகு அருகில் உள்ள கோவில், பார்க், ஓட்டல் என்று சுற்றத் தொடங்குகிறார்கள். பிறகு கல்லூரிக்கு மட்டம் போட்டுவிட்டு பக்கத்தில் உள்ள பிரபலமான இடங்களுக்கு டூர் செல்லும் அளவுக்கு பழக்கம் முன்னேறுகிறது. இதற்கிடையே நம்பிக்கை என்ற பெயரில் தொடுதல், ஸ்பரிசம், முத்தங்களும் தொடர்கிறது. கடைசியில் எல்லை மீறி உறவுகளும் நிகழ்ந்து விடுகிறது. அதற்குப் பிறகு தனது ஆசை நிறைவேறிவிட்ட லட்சியத்தில்(!) `பாய்ஃபிரண்ட்’ வேறு கேள்பிரண்டை தேடிச் செல்கிறான். அப்போதுதான் `நாம் ஏமாந்துவிட்டோம்’ என்ற எண்ணமே பெண்களுக்கு வருகிறது. இவ்வளவு நாள் பெற்றோருக்குத் தெரியாமல் சுற்றிவிட்டு ஏமாந்த பிறகு பெற்றோரிடம் பிரச்சினையை கொண்டு சென்றால் என்னாகும்? அது அடுத்தகட்ட விபரீதம் என்பதை புரிந்து கொண்டு எல்லா விஷயங்களையும் தங்களுக்குள்ளேயே குழிதோண்டி புதைத்து விடுகிறார்கள் பல பெண்கள்.

எவ்விதமான பிரச்சினைகளும் இல்லாமல் திருமணம் வரை பாய்ஃபிரண்ட் வைத்திருப்பவர்களுக்கு பிரச்சினை வேறொரு கோணத்தில் வருகிறது. இவர்களுக்கு சிக்கல் ஏற்படுவதே திருமணத்துக்குப் பிறகு தான். இவர்களை மணந்து கொள்ளும் ஆண்கள், திருமணத்துக்கு முந்தைய தங்கள் மனைவியின் ஆண் நட்பு வட்டம் பற்றி இயல்பாக பேசி தெரிந்து கொள்கிறார்கள்.

பெண்களின் ஆண் நட்பை அப்படியே ஏற்றுக் கொள்ளும் கணவர்கள் எவருமில்லை. மனைவி இயல்பாகவே தன் பாய்ஃபிரண்டை கணவனிடம் அறிமுகப்படுத்தினாலும், அவர்களுடன் பழகநேர்ந்த தருணங்களை நினைவுபடுத்தினாலும் கணவருக்கு உள்ளுர சந்தேகம் வலுத்துக் கொண்டே போகிறது. இதற்குப்பிறகு கணவன்-மனைவிக்குள் ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால், முதலில் கணவன் ஆரம்பிப்பது பாய்ஃபிரண்ட் பற்றிய பேச்சைத்தான். அடிக்கடி நடக்கும் இதுபோன்ற பிரச்சினை நேரங்களில் எல்லாம் கூசாமல் மனைவி மீது சந்தேகஅம்பை வீசி விடுகிறான் கணவன். இதனால் ஏராளமான பெண்களின் வாழ்க்கை பாழாகி இருக்கிறது. இப்படிப்பட்ட சந்தேகப் பிரச்சினைகளால் தகராறு ஏற்பட்டு விவாகரத்துக்குச் செல்பவர்கள்தான் ஏராளம்.

குடும்ப வாழ்க்கையில் தம்பதிகளுக்குள் ஏற்படும் பலவீனங்களைப் புரிந்து கொண்டு `ப்ளாக் மெயில்’ செய்யும் பாய்ஃபிரண்டுகளும் இருக்கவே செய்கிறார்கள். பணத்தை வாரி இறைத்து பெண்களை வளைக்கும் பாய்பிரண்டுகளும் பெருகி வருகிறார்கள். வெறும் பொழுதுபோக்கிற்காக பழகும் பாய்பிரண்டுகளும் அனேகம். நல்ல நட்புடன் இருப்பவர்கள் கொஞ்சமே கொஞ்சப்பேர் தான்.

எனவே ஆண்-பெண் நட்பு என்பது நிச்சயம் எல்லைக்குட்பட்டது என்பதை பெண்கள் நினைவில் வைக்க வேண்டும். அந்த எல்லையைத் தாண்டினால் அளவுக்கு மீறிய பிரச்சினைகளையும், தொல்லைகளையும் சந்திக்க வேண்டியதிருக்கும் என்பதை மறந்து விடக்கூடாது.

தொழுதிடுவோம் வாருங்களேன்


நிலையில்லாத உலகமதில்
நிரந்தரமின்றி வாழும் நாம்
நித்திய ஜீவன் அல்லாஹுவை
நித்தம் தொழுதிட வேண்டாமா?

நிம்மதியில்லா உள்ளத்தில்
நிலைதடுமாறும் எண்ணங்களை
நேர்மையாளன் அவனிடத்தில்
கூறி முறையிட வேண்டாமா?

அற்பமான இவ்வுலகில் – மிக
சொற்பகாலம் வாழும் நாம் – வெகு
நுட்பமாய் நற்செயல் புரிந்து – இறை
நட்பைப் பெற்றிட வேண்டாமா?

நாளைய நீதி மன்றத்தில்
நேர்மையாளன் முன்னிலையில் – சற்றும்
நிலைகுலையாமல் பதிலளிக்கும்
நெஞ்சுரம் நமக்கு வேண்டாமா?

அல்லாஹ்-வுக்கும் அவன் தூதர்
அண்ணல் நபிக்கும் வழிபட்டு – புனித
அருள்மறை போற்றும் சுவனத்தை – நாம்
அடைந்திட முயல வேண்டாமா?

பாவமறியா புருஷர்களா? நாம்
தவறே செய்யா மானிடரா?
நிறைமனதோடு முறையிடவே – அவனை
நித்தம் தொழுவோம் வாருங்களேன.

இறையில்ல பாங்கோசை இரவு பகல் கேட்கிறதே
நம் காதில் விழவில்லையா?
முறையாகச் சென்றங்கு நிறைவாகத் தொழுதேற
நல்லெண்ணம் வரவில்லையா?

கந்தூரி பெயராலே கச்சேரி நடக்கின்ற
ஊர்தேடி செல்கின்றோமே
பார்க்கின்ற இடமெல்லாம் பள்ளிகள் பலவிருந்தும்
பாராமல் போகின்றோமே

மரணத்தித்தின் பின்னாலே மறுவாழ்வு உண்டென்ற
நம்பிக்கை எழவில்லையா? – அந்த
மஃஷரின் அதிபதி வழங்கிடும் தீர்ப்புக்கு
பலியாவோம் நாமில்லையா?

உத்தமதிருநபியின் உம்மத்து நாமமென்று
உணர்ச்சிதான் வரவில்லையா? அந்த
சத்திய திருநாதர் காட்டிய வழியிலே
தொழுதிடுவோம் வாருங்களேன்

மரித்த நம் உடலதனை மண்ணறையில் வைத்தபின்
நமது நிலை என்னாகுமோ?
முன்கர்-நகீர் கேட்டும் கேள்வி அனைத்திற்கும்
நமது பதில் எதுவாகுமோ?

நாம் மைய்யித்தாகுமுன் – நம்மைத் தொழவைக்கும் முன்
நாம் தொழுதிடல் வேண்டுமன்றோ?
மறுமையின் தலைவாயில் மண்ணறைப் புகுமுன்னே
தொழுதிடுவோம் வாருங்களேன்.

முஸ்லிமாய் பிறந்த நாம் முஸ்லிமாய் வாழ்ந்து – பின்
முஸ்லிமாய் மரித்தல் வேண்டும்
முஃமினாய் சுவனமதை அடைகின்ற பாக்கியம்
நமக்கெல்லாம் கிட்ட வேண்டும் – நாம்

இறுதியாய் விடும் மூச்சு லாயிலாஹ இல்லல்லாஹ்
என்று வெளியாக வேண்டும்
கலிமாவோடு கரைசேர கண்ணியமாய் ஐவேளை
தொழுதிடுவோம் வாருங்களேன்

தன்னை மட்டும் வணங்குவதற்காகவே
இறைவன் நம்மை உருவாக்கினான்
மனு – ஜின் இனத்தாரை இதற்காகவல்லாது
வேறேன் படைப்பாக்கினான்?

இறைவனை வணங்காது இறுமாப்பாய் வாழ்வது – இறை
நிராகரிப் பாகுமன்றோ?
நிறைவாக இறையோனை நித்தம் ஐவேளை
தொழுதிடுவோம் வாருங்களேன்

மண்ணினால் படைத்து நம்மை மனிதானாய் உருவாக்கிய
மறையோனை மறக்கலாமா? – அந்த
மண்ணுக்கே இரையாக்கி மறுபடியும் எழுப்பிடும்
இறைவனை வெறுக்கலாமா?

இன்னுயிர் வாழும் நாம் நாளை இருப்போமா?
எண்ணிடல் வேண்டமன்றோ? – இந்த
உடலினை விட்டுயிர் பிரியுமுன்னே
தொழுதிடுவோம் வாருங்களேன்

மறுமையது உண்மையென முழுமையாய் நம்பிடும்
முஃமின்கள் நாமல்லவா? – அந்த
மஃஷர் மைததானிலே இறைவன் முன் நிலையிலே
நிறுத்தப்படுவதும் நாமல்லவா?

தொழுகையோடு ஏனைய செயல்களுக்கெல்லாம் பதில்
சொல்வதும் நாமல்லவா? – நல்ல
தீர்ப்பினது முடிவதனை தெரிந்திடும் முன்னமே
தொழுதிடுவோம் வாருங்களேன்.

மண்ணறை வேதனையை மறுமைநாள் வரையில் நாம்
அனுபவித்தாக வேண்டும் – இறை
விசாரணைக்காக நாம் மீண்டும் உயிர்பெற்று
எழுந்துதான் ஆக வேண்டும்.

படைத்தவன் கேட்டிடும் கேள்விகளுக்கெல்லாம் பதில்
சொல்லியே தீரவேண்டும் – அந்த
இறுதியுக நாளிலே மோட்சத்தை அடைந்திடவே
தொழுதிடுவோடும் வாருங்களேன்.

சுவனமும், நரகமும் நம்மவர்க்காகவே
படைத்தவன் இறைவனன்றோ? 
உலகினில் நாம் செய்த செயல்களின் கூலிகளை
தருவதன் உரிமையன்றோ?

வணக்க வழிபாட்டுடனே மன்னிப்பை கோருவது
மாந்தர்த் கடமையென்றோ? – நல்
சுவனத்தை நாடியே துரிதமாய் ஜமா அத்தாய்
தொழுதிடுவோம் வாருங்களேன்

உலகாசாபாசங்களில் மனதை பறிகொடுத்து – நாம்
மயக்கத்திலாழ்திடாமல்
கேளிக்கை கூத்துகளில் காலத்தை கடத்தியே – நற்
கருமங்கள் செய்திடாமல்

நிலையில்லா வாழ்க்கையில் நிம்மதியிழந்து நாம்
கைசேதமடைந்திடாமல் – உடல்
நலமாயிருக்கையிலே நித்தமும் ஐவேளைத்
தொழுதிடுவோம் வாருங்களேன்

இறைவன் மேல் விசுவாசம் இதயத்தில் ஏந்தியே
இரவுபகல் தொழுதல் வேண்டும்
இறையச்ச உணர்வோடு இறைத்தூதர் காட்டிய
வழியிலே தொழுதல் வேண்டும்

குறைபாடு இல்லாத நிறைவான தொழுகையாய்
நித்தமும் தொழுதல் வேண்டும்
முறையாக இறைவனை முழுமையாய் ஐவேளைத்
தொழுதிடுவோடும் வாருங்களேன்

தொழுகையை அதனதன் நேரத்தில் தொழுவதே
தொழுகையின் சிறப்பம்சமாம்
தொழுகையை தொழுகின்ற முறையோடு தொழுவதே
தொழுகையின் முழு அம்சமாம்

தொழுகையை இமாமுடன் கூட்டாகத் தொழுவதே
தொழுவோர்க்கு திருப்தி தருமே
தொழுகின்ற மக்களுடன் தோழோட தோள் நின்று
தொழுதிடுவோம் வாருங்களேன்.

பேணுதலில்லாத தொழுகையைத் தொழுவதால்
பயனேதும் கிட்டிடாது
பயபக்தி இல்லாத வணக்க வழிபாடுகளால்
புண்ணியம்  கிடைத்திடாது

ஜும்மாஆ -வை மட்டுமே தவறாமல் தொழுவதால் செய்த
பாவங்கள் நீங்கிடாது
படைப்பாளன் அல்லாஹ்வை பயந்து தினம் ஐவேளைத்
தொழுதிடுவோம் வாருங்களேன்

தொழுகையே இஸ்லாத்தின் தூண் என்று உரைத்த நபி
வாக்கினை மதித்தல் வேண்டும்
நிலைபாடாய் தினம் தொழுது இஸ்லாத்தின் தூணினை
கட்டியவராக வேண்டும்

தொழுகையே இல்லாமல் இஸ்லாத்தின் தூணினை
இடித்தவராகமலே
தொழுகையே சுவனத்தின் திறவு கோல் என்பதால்
தொழுதிடுவோம் வாருங்களேன்

தொழுகையே ஈமானை வலுவாக்கும் ஆயுதம்
தொழுகையே சுவனம் சேர்க்கும்
தொழுகையே மூஃமினை மோட்சத்திலாக்கிடும்
தொழுகையே மூலதனமாம்

தொழுகையே பாவச்சுமைகளைக் களைந்திடும்
தொழுகையே அரணாகுமே
தொழுகையே இருலோக வெற்றியை அடைந்திட
தொழுதிடுவோம் வாருங்களேன்

மறுமை விசாரணையில் இறைவனின் முதல்வினா
நீ தொழுதாயா? என்பதாகும்
தொழுகையே இல்லார்க்கும் அலட்சியம் செய்வோர்க்கும்
இறைத்தண்டனை கடுமையாகும்

மூஃமினை காஃபிரை வித்தியாசம் காட்டுவது
தொழுகை எனும் வணக்கமாகும்
அல்லாஹ்-வின் கிருபையால் அருள் சுவனம் நாடியே
தொழுதிடுவோம் வாருங்களேன்

திருமறை குர்ஆனில் தொழுகையை வலியுறுத்திக்
கூறாத இடங்களில்லை
திருநபியின் போதனையில் திருமறையின் சிறப்புக்களை
சொல்லாதா கிரந்தமில்லை

ஐங்கால தொழுகையின் அழைப்பினைக் கேட்காத
செவிப்புலன் எவர்க்குமில்லை
இறைவனை அஞ்சியே இரவு பகல் ஐவேளைத்
தொழுதிடுவோம் வாருங்களேன்

இம்மையில் வித்திட்ட மறுமையில் அறுவடை
செய்பவன் புத்திசாலி
பொன்னான நேரங்களில் புண்ணியம் சேர்ப்பவன்
போற்றத்தகு திறமைசாலி

கைவெண்ணெய் இருக்கையில் நெய்ககலைபவன்
கோமாளி ஏமாளியே
காற்றுள் போதே தூற்றிட அழைக்கிறேன்
தொழுதிடுவோம் வாருங்களேன்

JAQH | ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்

JAQH | ஜம்மியத்து அஹ்லில் குர்ஆன் வல் ஹதீஸ்